2006 நவம்பர் மாதம் புலிகளால் கைது செய்யப்பட்ட 7 இலங்கைக் கடற்படையினரில் சமிந்த குமார ஹெவாஜ் என்பவரும் ஒருவர். வன்னியில் இறுதிக்கட்ட சண்டைவரை இந்த 7 பேருக்கும் ஒரு ஆபத்தும் வராமல் பாதுகாத்த புலிகள், கடந்த மே 17 இல் அவர்களை விடுவித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அவர் பி.பி.சி இன் சிங்கள சேவைக்கு பேட்டியளித்துள்ளார்.


போர்க்கைதிகள் அனைவரும் சீமெந்தால் கட்டப்பட்ட பதுங்கு குழிக்குள் வைக்கப்பட்டிருந்த போதும், இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்களால் அவை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததாகக் கூறும் சமிந்த குமார,


இறுதி நேரத்தில் துப்பாக்கி ரவைகள் சில தமது பதுங்கு குழிக்குள் விழுந்ததாகவும் கூறியுள்ளார்.புலிகளால் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள் அனைவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் பதிவு செய்திருந்ததாகவும், புலிகள் அவர்களை ஒருவித சித்திரவதைக்கும் உள்ளாக்காமல் மரியாதையுடன் கவனித்துக் கொண்டதாகவும் கூறியுள்ள சமிந்த குமார தாம் இருந்த பதுங்கு குழிகளைச் சுற்றி புலிகளின் பல முகாம்கள் இருந்ததாகவும் கூறினார்.


போர்க்கைதிகள் எவரும் குடியிருப்புகளின் மீது ஷெல் வீழ்ந்ததைக் காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்ற அவர், பொதுமக்கள் குடியிருப்புகள் என்று தாம் அறிந்திருந்த பகுதிகளை அண்டி பல ஷெல்கள் வீழ்ந்ததை தம்மால் உறுதிப்படுத்த முடிந்ததாக மேலும் பி.பி.சி சிங்கள சேவைக்குக் கூறினார். எனவே தான் பொதுமக்கள் வன்னியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் சமிந்த குமார.


ஆரம்ப காலத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கிளிநொச்சி மாவட்ட கனகபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகள், பின்னர் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். “இடம் மாறும்போது புலிகளின் வாகனங்களில் எங்களைக் கொண்டு சென்ற புலிகள், பின்னர் ராணுவத்தினரின் தாக்குதல் அதிகரித்ததன் பின்னர் எங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் கால்நடையிலேயே கூட்டிச் சென்றார்கள்” என்று புலிகள் தம்மீது வைத்திருந்த அக்கறை பற்றி பெருமையாகக் கூறினார். பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது ஷெல் விழுந்து அவர்கள் பட்ட பல இன்னல்களைத் தாம் அறிந்துள்ளதாகக் கூறிய இவர் இறுதி நேரச் சண்டையின்போது நடந்த சில முக்கிய விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.


விடுதலைப் புலிகள் எவருமே ராணுவத்தினரிடம் சரணடையும் நோக்கில் இருக்கவில்லை. புலிகளுக்கு இறுதி நேரச் சண்டைகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்கள் சில போதாமல் போன கட்டத்தில் கூட அவர்கள் இவ்வாறு சரணடையும் முடிவுக்கு வராமல் தம்மிடம் உள்ள ஆயுதங்களின் ஓசை தானாகவே அடங்கும் வரை ராணுவத்தினரை எதிர்த்துப் போராடி வீரமரணமடையவே விரும்பி இருந்தனர் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் சமிந்த குமார.


சயனைட் குப்பியை தமது மாலையாக அணிந்திருந்த புலிகளே சரணடைந்து விட்டார்கள் என்று மார்தட்டிய சிங்களப் படையினருக்கும், எமது மக்களின் சந்தேகத்துக்கும் இவரது பேட்டி சரியான பதிலளிக்கும் என நாம் நம்புகிறோம். கண்முன்னே இறந்து கொண்டிருந்த மக்களையும் அவர்கள் பட்ட அவலங்களையும் கண்டு சகிக்க முடியாத சில அரசியல் பிரிவினர்கள் சரணடைய முற்பட்டது கூட, புலிகள் அகிம்சை வழி தீர்வுக்குக்கூட தயார் என்று காண்பிக்கவும் மக்களைக் காக்க வேண்டிய தமது கடமையைச் செவ்வனே செய்வதற்குமே ஆகும்.


ஆனால் சண்டையில் ஈடுபட்ட தளபதிகளோ, போராளிகளோ ராணுவத்திடம் போய் மண்டியிட்டு சரணடையும் எண்ணத்தைக் கனவில் கூடக் கொண்டிருக்கவில்லை என்று அறியும்போது தமிழர்களாகிய நாம் என்றுமே கோழைகள் அல்ல…. எங்கள் நிலத்தைக் கைப்பற்றும் எமது தொடர் போராட்டங்கள் என்றுமே தொடரும்.
கொழும்பு: அதிபர் ராஜபக்சே மே 19ம் தேதி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் வேறு உடையில்தான் இருந்தார். நாங்கள்தான் விடுதலைப் புலிகளின் சீருடையை அவரது உடலில் அணிவித்தோம் என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் கடைசி கட்டப் போரின்போது ஈடுபட்டிருந்த 53வது படைப் பிரிவின் தளபதியான கமல் குணரத்ன.

பிரபாகரன் குறித்து தொடர்ந்து மாறுபட்ட செய்திகளே வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் பிரபாகரன் உடலுக்கு நாங்கள்தான் டிரஸ் போட்டு விட்டோம், நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் கமல் குணரத்ன.

ராஜபக்சே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பே பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக செய்திகள் உலா வரத் தொடங்கி விட்டன என்பது நினைவிருக்கலாம். ஆனால் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் பேசியபோது எதையும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லங்கதீப் என்ற சிங்கள இதழுக்கு கமல் குணரத்ன அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது...

19 ம் தேதி காலை 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் சென்ற எமது சிப்பாய் ஒருவர் என்னுடன் பேசினார். சார், பிரபாகரனின் உடல் இருக்கிறது என்றார். அவர் அப்படிக் கூறும்போது அதை நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை. அப்போது சண்டை நடந்துகொண்டிருந்தது.

நான் அந்த உடலைக் காட்டிற்கு வெளியே கொண்டு வருமாறு கூறினேன். எனது சிப்பாய்கள் அந்த உடலை எனது காலடியில் கொண்டுவந்து போட்டனர்.

முழு இலங்கையும் பார்க்க ஆவலாக இருந்த உடலை நான் பார்க்கும் வரை உறக்கமின்றி இருந்தேன். அந்த உடலை தண்ணீரில் இழுத்துக்கொண்டு வரும்போது சுமார் 3000 சிப்பாய்கள் அங்கு கூடிவிட்டனர்.

19ம் தேதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டார். பிரபாகரன் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு 2 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுவதெல்லாம் பொய்யானது.

பிரபாகரனை கொன்றது எனது படைப்பிரிவின் சிப்பாய்களே. பிரபாகரன் பற்றி கூறப்பட்ட பல கதைகளில் ஒரு கதை உண்மையானது. அதாவது, பிரபாகரனின் சடலத்திலிருந்த சீருடை பிரபாகரன் மரணடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல.

அது பிரபாகரன் மரணமடைந்த பின்னர் எம்மால் அணிவிக்கப்பட்ட ஆடையே. அந்தச் சீருடையை பிரபாகரனின் சடலத்திற்கு அணிவித்தவர்கள் எமது சிப்பாய்களே. அந்த சடலத்தைப் பார்த்த முதல் டிவிசன் தளபதி நானே. என்னால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

நான் ராணுவத் தளபதிக்கு அழைப்பு மேற்கொண்டு பேசினேன். பிரபாரகனின் சடலம் இருப்பதாக கூறியதும் ராணுவத் தளபதி "ஆர் யூ ஷ்யூர்?' என்று கேட்டார். "ஷ்யூர் சார், எந்த சந்தேகமுமில்லை. பிரபாரகனின் சடலத்தை இனங்கண்டுள்ளோம் என நான் பதிலளித்தேன் என்று கூறியுள்ளார் குணரத்ன.

விழுப்புரம்: அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் அறிவிப்பார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

தமிழீழமும் நமது இன்றைய கடமையும் என்பது குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவரது சொந்த மண்ணில் நலமுடன் உள்ளார். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அவர் அறிவிப்பார்..

இலங்கை ராணுவ முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் மின்சார வேலி அமைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மருந்துகள் கிடையாது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர்..

அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் திரும்புவது கிடையாது. இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்..

தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும்..

ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், சர்வதேச பத்திரிகையாளர்கள் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்துள்ளனர். அண்டை நாடான இந்தியா வாய் திறக்கவில்லை. ஏன் இலங்கைத் தலைமை நீதிபதியே கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இருக்கும் உணர்வுகூட இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இல்லை என்றார் நெடுமாறன்