முக்கியமான மூன்றே மூன்று விடயங்களை இந்தியாவிடம் நாம் - மீண்டும் மீண்டும் - எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும்.அந்த மூன்று விடயங்களையும் செய்யுமாறு - கடுமையான அழுத்தங்களைத் தொடர்ச்சியாகப் பிரயோகிக்க வேண்டும்.


தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள்:

அது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிபந்தனையற்ற உத்தரவாதம்.


தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள்:

வேறு எவரையும் எம் பிரதிநிதிகளாக நாம் எற்றுக்கொள்ளப் போவதில்லை.இந்தியாவின் நலன்களுக்கு எதிராகப் புலிகள் எப்போதும் செயற்படவில்லை.புலிகள் மீதான தடையை நீக்கி இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்துங்கள்.


சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:

கருவிகள், உளவுத் தகவல்கள், ஆளணி, ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை.


செயல் - 1:


உலகிலுள்ள ஒவ்வொரு இந்தியத் தூதுவரகத்தையும் நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களும், இளையோர் அமைப்புக்களும் தேர்ந்த பிரதிநிதிகள் குழக்களை [Delegations] உருவாக்கி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களைச் சந்தித்து இந்த மூன்று விடயங்களையும் வற்புறுத்த வேண்டும். இன்றே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.


ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ போய்விட்டு விட்டுவிடாமல், தொடர்ச்சியாக - மாதத்தில் இரு தடவையாவது - செல்ல வேண்டும். இந்தியத் தூதுவரகங்கள் மீது அழுத்தங்களை இடைவிடாது போட வேண்டும்.


எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாமும் ஓயப் போவதில்லை என்ற தெளிவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.தற்போதைய போரை நிறுத்துவது பற்றியும், வன்னி மக்கள் எதிர்கொண்டு நிற்கும் மனிதப் பேரவலத்தைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரும் இனப் படுகொலை ஆபத்தைப் பற்றியும் சொல்லுகின்ற அதே வேளையில் -


இந்த ஒவ்வொரு சந்திப்பினதும் கடைசி 40 வீதமான நேரம், மேற்சொல்லப்பட்ட இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.இந்த மூன்று விடயங்களயும் நாம் முன்வைக்கும் போது - பல மழுப்பல் கதைகளை இந்திய தூதுவர்களும், அங்குள்ள அதிகாரிகளும் எமக்குச் சொல்லுவார்கள்.


"சோனியா காந்தி இருக்கும் வரை இவை எதையும் செய்ய முடியாது," "அவர் பழைய கோபத்தில் இருக்கின்றார்," "டெல்லியிலுள்ள காங்கிறஸ் தலைவர்கள் இவற்றுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்," "பிரபாகரன் மீது எல்லோரும் கோபத்தில் இருக்கின்றார்கள்," என்ற விதமாக ஆயிரத்தெட்டுக் கதைகளை அடுக்குவார்கள்.


"பிரபாகரன் இல்லாமல் போனால் அடுத்ததாக யார் வருவினம்?," "அடுத்த இடத்தில யார் இருக்கினம் என்று?" என்று கேள்விகள் கேட்பார்கள். ஏதோ, பிரபாகரன் இல்லாமல் போனால் தமிழருக்கு விடிவு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை எமக்கு ஊட்டுவது போல நடிப்பார்கள்.ஆனால், நாங்கள் மயக்கமடையாமல், திடமாகவும், ஒரே சீராகவும் இருந்து, தொடர்ச்சியாக எமது அந்த மூன்று கோரிக்கைகளையும் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும்.


செயல் - 2:


இந்தியத் தூதுவரகங்களின் முன்னால், இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்தி பேரணிகளை தொடர்ந்து நிகழ்த்த ஆரம்பிக்க வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாள்களும், இளையோர் அமைப்புக்களும் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.


ஆகக் குறைந்தது ஆயிரம் பேராவது ஒவ்வொரு தடவையும் அங்கு திரள வேண்டும். பேரணிகளின் முடிவில், தூதுவரையும், தூதுவரக அதிகாரிகளையும் வெளியில் அழைத்து எமது கோரிக்கைகளைக் கையளிக்க வேண்டும். எமது கோரிக்கைகள் நிறைவேறாது விட்டால், நாம் அடங்கிப் போக மாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும்.


ஆனால், இந்தப் பேரணிகளின் முக்கியத்துவம் இவை அல்ல -
முக்கியமானது என்னவெனில் - பேரணிகள் ஒழுங்கு செய்வதற்கு ஒதுக்கப்படும் சக்தியின் அதே அளவு, அல்லது அதைவிட அதிகமான அளவு சக்தி வெளிநாட்டு ஊடகங்களை [Foriegn Medias] அந்த நிகழ்வுக்கு வரவைப்பதிலும், அந்தப் பேரணிகள் பற்றிய செய்திகளை வெளியிட வைப்பதிலும் செலவிடப்படவேண்டும்.


பேரணிகளை வைத்துவிட்டு, சும்மா "புதினத்"திலும், "தமிழ்நெற்"றிலும் மட்டும் "சங்கதி"களைப் "பதிவு" செய்து, படங்களைப் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.


அந்தந்த நாடுகளிலுள்ள தமிழர்களது-அல்லாத ஊடகங்களை [Non-Tamil Medias] அங்கு வரவழைக்க வேண்டும். எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் அவர்களுக்கு விளக்கி - வலியுறுத்தி - அந்த ஊடகங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.


பன்னாட்டு ஊடகச் செய்திகள் தான் இந்தியாவின் மீதும், இந்தியத் தூதுவர்கள் மீதும் அழுத்தங்களை அதிகரிக்கும். அதே வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தான் அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்தையும் ஈர்க்கும். ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கும், அந்தந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தும்.


எந்த ஒரு மாபெரும் பேரணியின் வெற்றியும், பலனும் - அந்தப் பேரணிக்குப் பன்னாட்டு ஊடகங்களில் கிடைக்கும் இடத்தில் தான் தங்கியுள்ளது.


செயல் - 3:


கும்பல் கும்பலாக மின்னஞ்சல்களை அனுப்புவது எந்தப் பலனையும் தராது. அவற்றைத் திறந்து பார்க்கவே மாட்டார்கள். திறக்காமலேயே "குப்பைத் தொட்டி"க்கள் போட்டுவிடுவார்கள்.


தாள்களில் கடிதங்களை எழுதி இந்தியத் தூதுவரகங்களுக்கு இலட்சக் கணக்கில் நாம் அனுப்ப வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் தமிழ் செயற்பாட்டாள்கள், இளையோர் அமைப்புகளது துணையுடன் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.


சோனியா காந்தி அம்மையாருக்கும், மன்மோகன் சிங் ஐயாவுக்கும், அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களுக்கும் - சுருக்கமான ஒரு பக்கக் கடிதங்களைத் தனித்தனியாக எழுதி, உறைகளில் இட்டு இலட்சக் கணக்கில் அனுப்ப வேண்டும்.


அவ்வளவு பிரமாண்டமான தொகையில் வந்து குவியும் கடிதங்களை அவர்கள் திறந்து பார்த்தே ஆக வேண்டும். அவை அவர்களை ஏதோ ஒரு வகையிலான நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும்.


முக்கியமாக - அந்தக் கடிதங்கள் எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் உறுதியாக வலியுறுத்த வேண்டும்: தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசின் வேறு எந்த அணுகு முறையையோ அல்லது நடவடிக்கையையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.


தமிழீழத்தின் பிறப்பே இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கக்கூடியது என்பதை ஆதாரபூர்வமாக வலியுறுத்த வேண்டும்.