போர் நிறைவு பெற்றுவிட்டால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு தொடர்பாகவே அதிக அக்கறைகள் காண்பிக்கப்படுவதுண்டு. ஆனால் சிறீலங்காவில் நடைபெறுபவை மறுதலையானவை.
இறுதிக்கட்ட கடும் சமரில் 25,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் ஊனமடைந்தும், 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் உள்ளதுடன், ஏறத்தாள மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.
உலகின் ஜனநாயகம் தொடர்பாக கூச்சலிடும் எந்த ஒரு சக்தியும் இந்த மக்கள் தொடர்பாக காத்திரமான ஒரு நடவடிக்கையை இதுவரையில் மேற்கொள்ளவில்லை. வன்னியின் 15,000 சதுர கி.மீ பரப்பளவில் வாழ்ந்த மக்கள் இன்று முற்று முழுதாக அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் தாயகப்பகுதி முற்று முழுதான இராணுவ வலையமாக மாற்றப்பட்டும் வருகின்றது.
விடுதலைப்புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என வறட்டு கொள்கைகளை முன்வைத்து வந்த இந்திய மத்திய அரசு, தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் மீதான எந்தவொரு மனிதாபிமான நடவடிக்கையையும் மேற்கொள்ள முன்வரவில்லை.
மாறாக தமிழ் மக்களின் உரிமைப்போருக்கான அடையாளங்களை முற்றாக துடைத்தழிக்கும் கைங்காரியங்களில் அது ஈடுபட்டுவருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முன்நிறுத்தி அதனை காப்பதற்கு என தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்துவிட அது மறைமுகமாக பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது.
அதன் முதற்கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமையை மாற்றுவதற்கு இந்தியா முற்பட்டுள்ளது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்ட இந்திய புலனாய்வு அமைப்பான “றோ” அது தொடர்பில் பல மிரட்டல்களை விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது கருத்துக்களுக்கு இணங்காது விட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் தேசியத்தின் கோட்பாடுகளை சிதைக்கும் மாற்றுக்குழுக்களை உருவாக்கும் முயற்சியிலும் இந்தியா மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது.
அதற்கு தேவையான உறுப்பினர்களை தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் முகாம்களில் இருந்து பலவந்தமாக திரட்டியும் வருகின்றது. விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்ற போதும், விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் எவையும் கடந்த இரு மாதங்களாக இடம்பெறாத போதும் இந்தியாவை பொறுத்தவரையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் அரசியல் உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்றே தெரிகின்றது.
அந்த அரசியல் உறவுகளின் ஊடாக அது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுத்தரப்போவதுமில்லை. அதாவது காலம் காலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்துவந்த துரோகத்தை இந்தியா தொடரப்போகின்றது என்பது மட்டும் தெளிவானது.
எனவே அதனை எதிர்கொண்டு இந்திய - சிறீலங்கா அரசுகளின் பிடியில் இருந்து ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றெடுக்கும் சக்தியாக மீண்டும் தமிழினம் போராடவேண்டும் என்பது தான் தற்போது எமக்கு விடப்பட்டுள்ள ஓரே வழி.
போராட்டத்தின் பாதை என்ன? என்பது அல்ல இங்கு உள்ள பிரச்சனை நாம் எவ்வாறு ஒன்றிணைந்து போராடப்போகின்றோம் என்பதே தற்போது எமக்கு முன் உள்ள சவால்கள்.
கால ஓட்டத்தில் எமது மக்களின் வலிகளும் வேதனைகளும் கலைந்து போகும் முன்னர் எமது இனத்தின் விடுதலைக்காக நாம் களத்திலும், புலத்திலும் உள்ள எமது போராட்ட சக்திகளை பலப்படுத்தவேண்டும்.

edit post

Comments

0 Response to 'ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்துவந்த துரோகத்தை இந்தியா தொடரப்போகின்றதா?'

Post a Comment