சித்திரவதை முகாம்களில் சிக்கியுள்ள மூன்று லட்சம் ஈழத் தமிழரை அவர்களின் வாழ்விடங்களில் உடனே மீண்டும் குடியமர்த்தக் கோரியும், இரக்கமற்ற போர்க் குற்றவாளிகள் ராஜபக்ச சகோதரர்களைக் கைதுசெய்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. இதன் முதற்கட்டமாக நாளை வெள்ளிக்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு கோயம்புத்தூர் நகர பேருந்து நிலையம் முன்பாக இக்கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்படுகிறது.

பல்லடம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய ஊர்களிலும் மற்றும் வழியோர கிராமங்கள் அனைத்திலும் தொடராக மூன்று நாட்களுக்கு கையெழுத்து பெறும் பணி நடக்கிறது.

இதனை கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள், கோவை வழக்கறிஞர்கள் மற்றும் மனித நேயத்திற்கான மாணவர் அமைப்பு ஆகியோர் முன்நின்று நடத்துகிறார்கள்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் தொல்காப்பியன், பஞ்சலிங்கம், இளையராஜா, குமார் மற்றும் வழக்கறிஞர்கள் சிவக்குமார், கலையரசன், பிரபாகரன் உட்பட எண்ணற்ற இளைஞர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

இந்த இரண்டு கோரிக்கைகளில் ஐ.நா. சபையை உடனடியாகத் தலையிடக் கோரும் இந்த இயக்கம் அடுத்த வாரத்தில் இருந்து சேலம், மதுரை, சென்னை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருச்சி சட்டக் கல்லூரிகளிலும் நடைபெறவிருக்கிறது.

இது குறித்து சட்டக்கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும் ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மனித குலத்தின் மீது மாளாத அக்கறை கொண்ட உலகக் குடிமக்களாகிய நாங்கள் தாங்கள் ஏற்கெனவே உணர்ந்த இலங்கையின் இரு விடயங்கள் மீது அழுத்தமான கவனத்தைக் குவித்து உடனடி நடவடிக்கையில் இறங்கக் கோருகின்றோம்.

1. சொந்த நாட்டிற்குள்ளேயே மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டு ஹிட்லரது வதை முகாம்களை மிஞ்சுகின்ற வகையில் அமைக்கப்படுள்ள முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர். "ஒவ்வொரு வாரமும் மெனிக் பார்ம் முகாமில் குறைந்தது 1,400 தமிழ் மக்கள் சாவைச் சந்திக்கின்றனர்" என்கிறது 'லண்டன் ரைம்ஸ்' பத்திரிக்கை. இக்கூடாரங்களில் சிக்கிக் கொண்டுள்ள மழலைகள் மட்டும் 80,000 பேர். சிறிதளவும் சுகாதாரமற்ற இம்முகாம்களால் அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற துயரங்களால் நாள்தோறும் மரணிக்கும் மழலைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. 180 நாட்களில் அவர்களை மீண்டும் வசித்துவந்த இடங்களில் குடியேற்றுவோம் என முன்னர் அறிவித்த போர்க்குற்றவாளி ராஜபக்ச இப்போது "அதில் பாதிப்பேரைத்தான் குடியேற்றுவோம். இதுவும் எங்கள் இலக்குதானே தவிர உத்திரவாதம் அல்ல." என பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளார். அப்பாவி மக்கள் மீது போரை யார் நடத்தினார்களோ அவர்களே அம்மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பார்கள் என நம்புவது அறிவியலுக்கும், ஆறறிவுக்கும் ஒவ்வாத விடயம். ஆகையால் தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு உடல் உறுப்புக்களை இழந்தும், வீடிழந்தும், சுகாதாரம் இழந்தும், கல்வியை இழந்தும் அபலைகளாய் அல்லற்படும் மக்களை உடனடியாக அவர்களது வாழ்விடங்களில் மீளக்குடியமர்த்தி நீதி வழங்குவீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.

2. தங்களின் சொந்த நாட்டு மக்களின் மீதே மனித குலம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு முப்படைத் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள் கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோரை கைது செய்து அனைத்துலக குற்றவியல் வழக்கு மன்றத்தின் முன்பாக நிறுத்தக் கோருகின்றோம். தொடரும் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான கொடூர குற்றங்கள், போர் நியதிகளை மீறி நடத்தப்பட்ட அப்பட்டமான போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்காக இவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் என வலியுறுத்துகிறோம். நீதியின்பாலும், உலக மேம்பாட்டின் மீதும் அக்கறை கொண்ட தாங்கள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள் என கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
edit post

Comments

0 Response to 'ஐ.நா.விடம் நீதி கோரி தமிழ்நாட்டில் இன்று கையெழுத்து இயக்கம்'

Post a Comment