விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் கூறியதாக செய்திகள் வருகின்றன.
அவர்கள் ஒரு வாகனத்தில் தப்பியபோது ராணுவம் தடுத்து நிறுத்தியதாகவும் அப்போது பிரபாகரன் குடும்பத்தின் பாதுகாவலர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் வாகனத்தில் இருந்த அனைவருமே கொல்லப்பட்டனர்.பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நந்திக்கடல் பகுதியிலேயே இந்தச் சண்டை நடந்ததாகவும் அவர்களும் அங்கேயே கொல்லப்பட்டாகவும் என்று ராணுவம் கூறியதாக இந்திய தனியார் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
ஆனால், அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தச் செய்தியை வேறு சர்வதேச செய்தி நிறுவனங்கள் இரவு வரை உறுதிப்படுத்தவில்லை.முன்னதாக பிரபாகரன் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று பெரிதும் நம்பப்பட்டது.பிரபாகரனின் மகள் துவாரகா நீண்ட காலத்திற்கு முன்பே லண்டனுக்குப் போய் விட்டதாகக் கூறப்பட்டது. அதேசமயம், மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி, மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பிரபாகரனுடனேயே இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.
அதே நேரத்தில் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை- பார்வதி ஆகியோர் என்ன ஆயினர் என்று தெரியவில்லை. அவர்களும் பிரபாகரனுடன் தான் வசித்து வந்தனர்.பிரபாகரன் அவர்களை போர்க் களத்திலிருந்து வேறு பகுதிக்கு போகுமாறு கூறியும் வயதான அந்தப் பெரியவர்கள் கேட்கவில்லையாம். என்ன நடந்தாலும் சரி உன்னுடனேயே இருப்போம் என்று தனது மகனிடம் கூறிவிட்டு அங்கேயே இருந்துள்ளனர்.
இதற்கிடையே, மேலும் 7 புலிகள் இயக்கத் தலைவர்களின் உடல்களை அடையாளம் கண்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.கடற்படைப் பிரிவு தலைவர் சூசை, கடற்புலிகள் பிரிவு முக்கிய தலைவர் ரங்கன், உளவுத்துறை மூத்த தலைவர் வெற்றி, உளவுப் பிரிவு முக்கிய தலைவர் ராம் குமார், பெண் உளவுப் பிரிவு முக்கிய தலைவர் மணிமேகலை என்கிற கோமளி, மட்டக்களப்பு அரசியல் பிரிவு தலைவர் அண்ணாதுரை, மூத்த உளவுப் பிரிவு தலைவர் வினோதன் ஆகியோரே அவர்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது
edit post

Comments

0 Response to 'பிரபாகரன் மனைவி-மகள்-இளைய மகன் கொலையா?'

Post a Comment