கொழும்பு: பிரபாகரனின் உடலை தகனம் செய்து விட்டதாக நேற்று கூறிய இலங்கை ராணுவம், இன்று அவரது அஸ்தியை இந்தியப் பெருங்கடலில் கரைத்து விட்டதாக
கூறியுள்ளது.இதைக் கூறியிருப்பவர் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார், உயிருடன் இருக்கிறார் என விடுதலைப் புலிகள் இருமுறை அறிவித்துள்ளது.
ஆனால் அவரது உடலைக் கைப்பற்றி விட்டதாக முதலில் கூறிய இலங்கை அரசு பின்னர் அதை புதைக்கப் போவதாக கூறியது. அதன் பின்னர் எரித்து விட்டோம் என தெரிவித்தது. இந்த நிலையில் அஸ்தியையும் கரைத்து விட்டோம் என ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ரிவிரா என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார் பொன்சேகா. இந்த இதழ் நாளை வெளியாகிறது.
தனது பேட்டியில், பொன்சேகா கூறுகையில், பிரபாகரனின் உடலை செவ்வாய்க்கிழமை அடையாளம் கண்டோம். பின்னர் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட அதே இடத்தில் அவரது உடலை தகனம் செய்து விட்டோம். அஸ்தியையும் இந்தியப் பெருங்கடலில் வீசி விட்டோம்.
பிரபாகரனைக் கொல்வதற்கு முன்பே, நாங்கள் போரில் வென்று விட்டோம் என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனால் பிரபாரகனின் மரணம் உறுதி செய்யப்பட்டவுடன்தான் நான் முழு மகிழ்ச்சியை அடைந்தேன்.
பிரபாகரனுடன் சேர்த்து அன்றைய தினம் நடந்த சண்டையின்போது மொத்தம் 170 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.'
பொட்டு அம்மன் உயிருடன் இருக்கிறார்':
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாகரனுடன் சேர்த்து பொட்டு அம்மனும் கொல்லப்பட்டு விட்டதாக முன்பு இலங்கை ராணுவம் கூறியிருந்தது. இருப்பினும் இலங்கையைச் சேர்ந்த ரிவிரா என்ற பத்திரிகைக்கு லேட்டஸ்டாக பேட்டி அளித்துள்ள ராணுவ தளபதி சரத் பொன்சேகா பொட்டு அம்மனை அடையாளம் காண முடியவில்லை என்று கூறியிருந்தார்.
மேலும், புலிகள் தலைவர்களை அடையாளம் காண அழைத்துச் செல்லப்பட்ட கருணாவும் கூட யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும், மொக்கு சிங்களவர்கள் கோட்டை விட்டு விட்டார்கள் என்று தனது சகாக்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் பொட்டு அம்மன் உயிரிழக்கவில்லை என்றும் அவர், கிழக்கில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள் தப்பிப் போய் விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கிருந்தபடி ராணுவத் தாக்குதலால் ஆங்காங்கு பிரிந்து போய் விட்ட புலிகள் இயக்கப் போராளிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
edit post

Comments

0 Response to 'பிரபாகரன் 'அஸ்தி'யை கடலில் கரைத்து விட்டோம்-கூறுகிறார் பொன்சேகா'

Post a Comment