தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா.

பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய இந்திய அரசின் பேராதரவுடன் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா நடத்துகின்றது.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலே, மருத்தவ மற்றும் பொது நிர்வாக வட்டாரங்கள் சேர்த்த புள்ளி விபரங்களின் படி -
இந்த வருடத்தின் அந்த முதல் 101 நாட்களில் மட்டும் -

கொல்லப்பட்ட 4,795 தமிழர்களில் - 1,207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்த 9,869 தமிழர்களில் - 2,864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர். 1,437 தமிழர்கள் உடல்
உறுப்புக்களை இழந்துள்ளனர்; அவர்களில் 394 பேர் சிறுவர்கள்.

வன்னியில் இருந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நா. சபையினதும் செயலாட்கள் இந்திய காங்கிரஸ் அரசினது ஆலோசனைக்கு அமைவாக எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

தனது படைகளின் கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளால் - தமிழரது உடலங்களை மிதித்து கொண்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா, அங்கு கடைசியாக எஞ்சியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாட்களையும் வெளியேற்றிவிட்டது.

போர்ப் பிரதேசங்களில் சேவையாற்றுவதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைப் பணி; ஆனால் - சிறிலங்காவின் உத்தரவுக்கும், இந்திய அரசின் செல்வாக்கிற்கும் அஞ்சி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறுகின்றது.
வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நிற்கின்றது.

இந்திய அரசுக்கு எதிராய் ஒரு சுண்டுவிரலைத் தானும் நீட்ட வக்கற்று இந்த உலகம், 'இராஜதந்திரம்' என்ற பெயரில் வெட்கம் கெட்டு நிற்கின்றது.
edit post

Comments

0 Response to 'தமிழர்களது புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து...'

Post a Comment